ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ், நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், தனது தாயை நினைவு கூர்ந்து பேசினார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குத் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதன்பிறகு நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கமலா ஹாரிஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "என்னுடைய தாய் ஷியாமலா கோபாலன்தான் எனக்கு முன்மாதிரி. என்னையும், என் சகோதரி மாயாவையும் நம்பிக்கையூட்டி வளர்த்தவர். அதனால்தான் அமெரிக்காவில் நாங்கள் சிறப்பான உயரத்தை எட்ட முடிந்தது. என் தாய் எப்போதும் என்னிடம் சொல்வது என்னவென்றால், பிரச்சனை வரும்போது சும்மா அமர்ந்திருக்காதே, முடிந்தவரை புகார் செய், ஏதாவது செய், களத்தில் இறங்கி போராடு என்று சொல்வார்.
உங்களுக்கு தெரியுமா? என்னுடைய தந்தையும், தாயும், உலகின் இரு எதிர் துருவங்களில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள். என்னுடைய தாய் ஷியாமலா இந்தியாவைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். இருவரும் கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தார்கள். போராட்டங்களில் கலந்துகொண்டபோது, அவர்கள் நண்பர்களானார்கள். இருவரும் சேர்ந்தே போராடினார்கள், நீதிக்காக முழுக்கமிட்டனர். நானும் அந்த போராட்டத்தின் ஒருபகுதியாக இருக்கிறேன். நான் பிறந்தபின் பல போராட்டங்களுக்கு என்னை என் தாயும், தந்தையும் அழைத்து சென்றுள்ளார்கள். இந்த போராட்டம் நமக்கானது அல்ல, ஒவ்வொருவரின் தலைமுறைக்கானது, தொடர்ந்து நடைபோட வேண்டும் என என் தாய் கூறுவார்" எனத் தெரிவித்தார்.