கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் தேவாலயங்கள், சோகுசு விடுதிகள் என 9 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் சுமார் 359 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று குழப்பங்கள் நீடித்த நிலையில் நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் திவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கு முன்னதாக இலங்கை பத்திரிக்கையாளர் சோமீதரன் கொடுத்த பேட்டியில்...
“இலங்கையைப் பொருத்தவரைக்கும் அங்கு நடந்த இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும் மறைப்பதற்காக அதன்மீது மதச்சாயம் பூசப்படுகிறது. மதப் பிரிவினை இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசு ஐநா சபையில் கொடுத்த அறிக்கையில் இனப்படுகொலை, இனப்புறக்கணிப்பு போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கிறார்கள். மத சிறுபான்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்த தொடங்குகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பிரிவினையை உருவாக்குவதற்கான வேலை நடந்துவருகிறது. இந்துக்களைப் பாதுகாப்பதற்காக சிவசேனா அமைப்பு உருவாக்கப்பட்டது, தொடர்ந்து அதற்கும் கிறிஸ்த்தவ அமைப்புக்களுக்கும் முரண்பாடுகள் எழுந்தன. சமீபத்தில் ஒரு தேவாலயத்திற்கு அருகில் சைவ பதாகை வைக்கப்படுகிற போது அதை எடுக்கச்சொல்லிப் பிரச்சனைகள் நடந்தன. இஸ்லாம் மதத்தின் அடிப்படைவாதம் பரவ ஆரம்பிக்கிறது. அதேபோல பௌத்த அடிப்படைவாதிகள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, இலங்கையில் மத நல்லினக்கத்தைத் தகர்த்துவிட்டு, மதங்களுக்கான அடிப்படைவாதம் திட்டமிட்டுக் கூர்படுத்தப்படுகிறது. இனப்படுகொலைக்கான தீர்வை நீர்த்துப்போகச்செய்து மத பாகுபாட்டை கூர்செய்கிற வேலை கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் பின்புலத்திலிருந்தும் இந்த பிரச்சனையை அணுகவேண்டியுள்ளது.
ஏற்கனவே தமிழர்களை அழித்து, ஒடுக்கி அவர்களை ராணுவக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். போர் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்தபிறகும், வடக்கு மாகாணத்திலிருந்து ஒரு ராணுவ வீரரையும் வெளியேற்றவில்லை. இந்த குண்டுவெடிப்பை முஸ்லீம் திவிரவாத இயக்கங்கள் செய்தன என்று சொல்வதன்மூலமும், முஸ்லீம்களோடு இதை தொடர்புபடுத்துவதன் மூலமும் இலங்கையில் இருக்கக்கூடிய முஸ்லீம்களுக்கு ராணுவ நெருக்கடி கொடுப்பதற்கும், தொடர்ந்து அந்தப்பகுதியில் ராணுவத்தை வைத்திருப்பதற்கும் வாய்ப்பு அமைகிறது. உலகில் எங்கு குண்டுவெடித்தாலும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என்றுச் சொல்லி பிரச்சனையை முடித்துவிடுகிறார்கள். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இருக்கும்போது இலங்கையில் எங்கு தாக்குதல் நடந்தாலும் அதை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்றுச் சொல்லக்கூடிய நிலைமை இருந்தது. இலங்கை அரசாங்கம் இந்த குண்டுவெடிப்பை யார் செய்தார்கள் என்று சொல்லவில்லை. இதுவரை கைதுசெய்யப்பட்ட 13 பேரில் எவரும் வெளிநாட்டவர் இல்லை. எனவே, உள்நாட்டில் இருப்பவர்களுக்கு இதில் தொடர்பு இருக்க வேண்டும்.
பானந்துறையில் ஒரு வீட்டில்தான் குண்டு வைத்தவர்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டில் தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்பைவிட முஸ்லீம் அடிப்படைவாதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தப்பிறகு இலங்கையில் இந்து அடிப்படைவாதமும் அதிகமாக உள்ளது. இவற்றைக் கூர்தீட்டுகிற வேலையும் தொடர்ந்து நடக்கிறது. இந்த சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக் குழுக்களால் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது சாத்தியமற்றது. மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது. இதில் ராணுவத்துடன் தொடர்புகொண்ட அல்லது ராணுவத்தின் அளவுக்கு திறன் கொண்ட அமைப்பு ஈடுபட்டுள்ளது தெரிகிறது. இப்போ முஸ்லீம் வாழக்கூடிய பகுதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கப்போகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதல் பாதுகாப்பின் மிகப்பெரிய ஓட்டை. போர் முடிந்தபிறகும் 5 லட்சம் ஆயுதம் தாங்கிய வீரர்களை வைத்திருக்கும் நாடாக இலங்கை இருக்கிறது. மிக சிறிய நாட்டிற்கு இவ்வளவு வீரர்கள் தேவையே இல்லை. இவ்வளவு பேரையும் வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள்?
கொழும்பு துறைமுகத்தின் எல்லையோடு இருக்கிற அந்தோணியார் கோவிலில் குண்டு வெடித்திருக்கிறது. அது ராணுவம் நடமாடக்கூடிய பகுதிதான், அதற்குப் பின்னால் இலங்கை கடற்படை இருக்கிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியிலும் ராணுவம் இருக்கிறது. அங்கும் தாக்குதல் நடந்திருக்கிறது. இதை பாதுக்காப்பு குறைபாடாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. மேலும், இந்த தாக்குதலால் யார் பயனடைகிறார் என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது. போர்க்குற்றங்கள் நிகழ்ந்து லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றப்பிறகும் இலங்கை அரசு கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை. விசாரணை நடத்தவேண்டும், ராஜபக்ஷேவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். போர் நடக்கும்போது இந்தியா மற்றும் அமெரிக்காவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி எந்த ஒரு சிறிய அரசியல் தீர்வை கூட இலங்கை அரசு செய்யவில்லை. மே மாதத்தில் இந்த பிரச்சனை பேசப்படக்கூடும். குண்டுவெடிப்பால் இது அடிபடப்போகிறது, போர்குற்ற விசாரணைப் போன்ற பிரச்சனைகள் அடிபடப்போகிறது. போர் முடிந்துவிட்டது, இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை, எனவே இலங்கை ராணுவத்தையும், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால நிலை போன்றவற்றை விலக்கிக்கொள்ளவேண்டும். இப்போது இருக்கிற பயங்கரவாத தடைச்சட்டம் அமலில் இருக்கிறது, அதனால், பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். இதன்பிறகு எதற்கு இந்த சட்டம்? அதை விலக்கிக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த வெடிகுண்டுத் தாக்குதல்மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்படியே வைத்திருக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.
எனவே, ராணுவத்தை அப்படியே வைத்திருக்க முடியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்படியே வைத்திருக்க முடியும், போர்க்குற்றங்கள் குறித்த பேச்சு அடங்கி குண்டுவெடிப்பு பற்றிய பேச்சுகள் எழும், இந்தியா, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவியாக நிற்கும். இவை அல்லாமல், இந்த ஆண்டு இறுதியில் ஒரு தேர்தல் வருகிறது. இப்போது இருக்கிற அரசுக்கு இந்த தாக்குதல் பெரிய பின்னடைவு. மகேந்திர ராஜபக்ஷே ஆட்சியில் இப்படி நடக்கவில்லை, ரணில் விக்ரமசிங்கே ஆட்சியில் தாக்குதல் நடந்திருப்பது ராஜபக்ஷேவுக்கு சாதகமாக அமையும். போர்காலத்தில் பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ராஜபக்ஷேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ஷே தற்போது தேர்தலில் நின்று அதிபராகப்போகிறேன் என்று சொல்கிறார். எனவே, இவரைப்போல் போரில் வெல்ல காரணமாக இருந்த ஒருவர் அதிபரானால் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகள் இருக்காது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். இந்த குண்டுவெடிப்பை யார் நிகழ்த்தியது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இதனால் ஏற்படபோகும் பின்விளைவுகளும் ஆபத்தானதாக உள்ளது.” இவ்வாறு கூறினார்.