கரோனா பரவல் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கரோனாவைக் குணமாக்க மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஒரேவழி என கருதப்படுகிறது. அதுநேரத்தில் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைப்போல், உலகின் பல நாடுகளும் தடுப்பூசியின்றி தவித்து வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தடுப்பூசி இன்றி திணறிவரும் பல்வேறு நாடுகளுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அமெரிக்கா, 6 கோடி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை உலகின் மற்ற நாடுகளோடு பகிர்ந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்துகொள்ளும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதன்மூலம் 8 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் இரண்டு கோடி தடுப்பூசிகளில், அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பைசர், மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் ஆகியவையும் அடங்கும் என தெரிவித்துள்ள ஜோ பைடன், ஜூன் இறுதியில், அதாவது அமெரிக்கர்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான தடுப்பூசிகள் கிடைத்த பிறகு, 8 கோடி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கும் பணி தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க, உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது முக்கியம் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "மற்ற நாடுகளில் பரவும் நோய் மற்றும் ஏற்படும் இறப்புகள், அந்த நாடுகளில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதோடு நமக்கும் ஆபத்தை விளைவிக்கும். நமக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்க கூடிய புதிய வகை கரோனாக்கள் வெளிநாடுகளில் உருவாகக்கூடும். நாம் இங்கு பாதுகாப்பாக இருக்கவும், மற்ற நாட்டிலுள்ள மக்களுக்கு உதவவும் உலகமெங்கிலும் நோயை எதிர்த்து போராட நாம் உதவ வேண்டும். இது செய்வதற்கு சரியான, புத்திசாலித்தனமான, வலுவான செயலாகும்" என கூறியுள்ளார்.