ரஷ்யாவில் நடைபெறும் 'ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு' நாடுகளின் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (02.09.2020) மாலை ரஷியா சென்றடைந்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 'ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு' நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இந்தக் கூட்டமைப்பில் சீனாவும் உள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அந்த மாநாட்டில் சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொள்ளவிருக்கும் சூழலில், ராஜ்நாத் சிங்கிற்கும் சீன அமைச்சருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தச் சுற்றுப்பயணத்தில் ராணுவ ஒத்துழைப்பு குறித்து ரஷிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேசுவார் என கூறப்படுகிறது. செப்டம்பர் 10 -ஆம் தேதி நடைபெறவுள்ள 'ஷாங்காய் ஒத்துழைப்பு' அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யா சென்றடைந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, ரஷ்ய மேஜர் ஜெனரல் புக்டீவ் யூரி வரவேற்று சக அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அதிகாரி ஒருவர் ராஜ்நாத் சிங்கிற்கு கை கொடுக்க முயன்றார், கரோனா அச்சத்தால், ராஜ்நாத் சிங் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் அங்கு சிரிப்பலை எழுந்தது.