ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, எட்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறி வருகிறது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்ச்சியாக ஆபரேஷன் கங்கா மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களை இந்திய தூதரம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், கார்கிவ் பகுதியில் இருந்து வெளியேற நினைக்கும் தங்களை உக்ரைன் ராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாக இந்திய மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து காணொளி வெளியிட்டுள்ள இந்திய மாணவர்கள், "கார்கிவ் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற உக்ரைனியர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும், அங்கிருக்கும் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தங்களை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், நான்கு மணி நேரங்களாக ரயில் நிலையத்தில் இருந்த எங்களுக்கு உணவுப்பொட்கள் உள்ளிட்ட எந்தவிதமான உதவியும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.