இந்தியாவில் உள்ள சீன பத்திரிகையாளர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதே சமயம் சீனாவில் உள்ள இந்தியப் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என இந்தியா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நாளிதழ் நிருபர் ஒருவர் கடந்த வார இறுதியில் சீனாவில் இருந்து வெளியேறினார். அதேசமயம் இந்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி மற்றும் மற்றொரு பிரபல செய்தித்தாளின் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு விசா காலம் முடிவடைந்த நிலையில் அதைப் புதுப்பிக்க சீன அரசு கடந்த ஏப்ரல் மாதம் மறுத்துவிட்டது. இதையடுத்து இவர்கள் மூவரும் அங்கு இருந்து வெளியேறிவிட்டனர்.
இதற்கு முன்னதாக சீனாவைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களின் விசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்திய நிருபரை வெளியேற்ற சீனா தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெய்ஜிங்கில் இந்திய ஊடகத்துறை சார்பில் பணியாற்றும் பிரபல செய்தி நிறுவனத்தின் கடைசி இந்தியச் செய்தியாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும் என சீனா அரசு அறிவுறுத்தியுள்ளது.