இங்கிலாந்து எலிசபெத் மகாராணியை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளிக்கு இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த 2022ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது, அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் போலீஸார் கைது செய்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்துள்ளார்.
21 வயதான இவர், கடந்த 2021ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் சட்டவிரோதமாக நுழைய முயன்றார். முகத்தில் முகமூடி அணிந்து அந்த அரண்மனையில் ஊடுருவிய ஜஸ்வந்த சிங்கை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தார். மேலும், கடந்த 1919ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் ராணி எலிசபெத்தை கொல்ல வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறையினர் ஜஸ்வந்த் சிங்கை கைது செய்தனர்.
இதனையடுத்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.