சர்வதேச பொருளாதார சூழல்களில் ஏற்படும் மாற்றத்தால், உள்நாட்டில் சிக்கல் ஏற்படாத அளவுக்கு இந்தியா தன்னை திறன்பட தற்காத்துக் கொண்டிருப்பதாக ஐஎம்எஃப் எனப்படும் பன்னாட்டு நிதியம் பாராட்டியுள்ளது.
பன்னாட்டு நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், உலகளாவிய முதலீடுகள் குறித்த விரிவான அறிக்கையை வாஷிங்டனில் வெளியிட்டார். இதன்பின் பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா காலகட்டத்தில், இந்தியா முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. தங்களின் முதலீட்டு சூழல் பாதிக்கப்படாத அளவுக்கு, கட்டுப்பாடுகளையும், தற்காப்பு ஏற்பாடுகளையும் இந்தியா ஏற்கனவே செய்து வைத்துள்ளது. தற்போது சர்வதேச சூழல் சரியில்லாத நிலையில், இந்தியா தனது முதலீட்டு சூழலைத் திறன்பட கையாண்டு வருகிறது. சில நாடுகள் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு கடன்களை வாங்கிச் சிக்கலில் தவித்து வருகிறது. இது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடம்" எனத் தெரிவித்தார்.
உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசியாவில் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பெரும் நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பன்னாட்டு நிதியம், இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.