பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான்கான் மீது பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன்பே இம்ரான்கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அப்போது நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அவரை கைது செய்யும் முடிவானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்ட இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்ரான்கான் கைதுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்தது. இதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இம்ரான்கான் கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என்றும் அவரது ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் இம்ரான்கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த அவரை கைது செய்யப்பட்ட விதத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இம்ரான் கானை கைது செய்தது சட்ட விரோதமானது என்று அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் எனது உடம்பில் கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை நாட்டு மக்களுக்கக தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பாகிஸ்தான் ராணுவம் நான் சிறையில் இருந்தபோது வன்முறையை சாக்காக வைத்து எனக்கு மரண தண்டனை விதிக்க முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது என்மீது தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தி 10 ஆண்டுகள் சிறையில் தள்ள திட்டமிட்டு வருகின்றனர்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.