மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 12 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு ஹாமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் ரானுவம் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், முதியோர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்து குறிப்பிடத்தக்கது.