மும்பை தாக்குதலில் முக்கிய பங்குவகித்தவன் ஹபீஸ் சயீத். ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள இவன் பாகிஸ்தானில் வசித்து வருகிறான். அங்கு அவன் சுதந்திரமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 23 ஆம் தேதி, ஹபீஸ் சயீத் இல்லத்தின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.
இதில் 3 பேர் உயிரிழந்ததோடு, 24 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அந்தநாட்டு போலீஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஹபீஸ் சயீத் இல்லத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாகப் பாகிஸ்தான் இந்தியாவைக் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "23 ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது ஒரு இந்தியர். அவருக்கு ரா-வுடன் (இந்திய உளவு அமைப்பு) தொடர்புள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்குவது குறித்த தரவுகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் எங்களிடம் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.