ஹாங்காங் விவகாரத்தில் பதவிநீக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என சீனாவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங், சுதந்திரப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு, அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹாங்காங் பகுதியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நிர்வாகப் பகுதியான ஹாங்காங்கை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுவரும் சீனா, அதற்கான பணிகளையும் ஹாங்காங் மக்களின் எதிர்ப்பை மீறிச் செய்து வருகிறது. குற்றவாளிகளைச் சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்த சூழலில், அந்நகரத்தின் நேரடி அரசியலில் தலையிடும் வகையிலான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியது சீனா.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், ஹாங்காங் எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடிய சட்டசபை உறுப்பினர்களைச் சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், சீனாவுக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய உலக நாடுகள் அணி திரண்டுள்ளன. கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹாங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் இந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சீனாவை வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஹாங்காங் விவகாரத்தில் சீன செய்வது அப்பட்டமான விதிமீறல் எனவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.