மாலத்தீவில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்ட கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றடைந்தார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், ஆவேசமடைந்த பொதுமக்கள் கடந்த வாரம் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனால் இலங்கையில் இருந்து குடும்பத்துடன் தப்பி மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால், அது தொடர்பான கடிதத்தை இதுவரை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் வழங்கவில்லை.
மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு, எதிர்ப்பு குரல் எழுந்ததால், அங்கிருந்து குடும்பத்துடன் அவர் சவூதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம், சிங்கப்பூர் சென்றடைந்தார். ஜெட்டா செல்லும் சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணம் செய்ததால், சிங்கப்பூரில் இருந்து சவூதி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தனர்.
ஆனால், அவர் தற்போது சிங்கப்பூரிலே தங்கியிருப்பார் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக்சே வந்துள்ளார்; அவருக்கு அடைக்கலம் தரவில்லை" எனத் தெரிவித்துள்ளது.