2 வார காலங்களில் பெருவாரியான குழந்தைகள் உட்பட 400 பேருக்கு எய்ட்ஸ் தோற்று ஏற்பட்ட சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாண பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து மாகாணத்தின் லர்கானாவின் புறநகர்ப் பகுதியான வஸாயோ கிராமத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து உடல்நல கோளாறுகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் இறுதியில் எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் எய்ட்ஸ் ஆரம்ப நிலை அறிகுறிகளுடன் வரும் மக்கள், குழந்தைகள் அனைவருக்கும் எய்ட்ஸ் கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகளின் முடிவில் தான் அதிர்ச்சிகரமான முடிவு அவர்களுக்கு கிடைத்துள்ளது.
சோதனை முடிவுகளின்படி கடந்த இரு வாரங்களில் மட்டும் 400 பேர் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு சோதனைக்கு வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. தவறான, சுத்தமில்லாத ஊசி போன்ற உபகரணங்களை அந்த பகுதியில் இருந்த சில மருத்துவர்கள் பயன்படுத்தியதன் விளைவாக அதிலிருந்து மக்கள் அனைவருக்கும் தவறுதலாக எய்ட்ஸ் பரப்பப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான பயிற்சியில்லாத அரைகுறை மருத்துவர்கள் சிலரால் இவ்வாறு பலரின் வாழ்க்கை வீணாகியுள்ளதாக இதனை கண்டறிந்த மருத்துவ குழு தெரிவித்துள்ளது. எய்ட்ஸ் தொற்று ஏற்பட்ட 400 பேரில் நிறைய குழந்தைகள் உள்ளனர் என்றும், இந்த தகவல் தற்போதுதான் மக்களுக்கு தெரிந்து வருவதால் சோதனைக்கு நிறைய பேர் வரும்போது தான் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள் என தெரியும் என்றும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் யார் மூலமாக இந்த எய்ட்ஸ் பரவியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஒருவர் பேட்டியளித்த போது, " என் 5 வயசு குழந்தைக்கு இப்படி ஒரு நோய் வருவதற்கு காரணமா இருந்த யாரும் நல்லாவே இருக்க மாட்டாங்க. எனக்கு இன்னும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்கும் இந்த நோய் வந்துட்டா நான் என்ன பண்றது. சீக்கிரமா யாரவது இந்த நோய்க்கு மருந்து அனுப்பி வையுங்க. இல்லனா எங்க ஊர்ல ஒரு குழந்தைங்க கூட பிழைக்காது" என கதறியுள்ளார். பாகிஸ்தானில் நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.