ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தாலிபன்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஆப்கானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் பேஸ்புக் நிறுவனம், தங்களது தளத்தில் இருந்து தாலிபன்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும், அவர்களை ஆதரித்து வெளியிடப்படும் பதிவுகள் நீக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆபத்தான கொள்கைகளை கொண்டவர்கள் என்பதால் எங்களது சேவைகளிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தலிபன்களால் அல்லது தலிபான்கள் சார்பாக பராமரிக்கப்படும் கணக்குகளை அகற்றுவோம். மேலும் தலிபான்களை புகழ்வது, ஆதரிப்பது மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துவது உள்ளிட்டவையும் தடை செய்வோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் தலிபான்களின் கணக்குகளைக் கண்டுபிடித்து நீக்கவும், அவர்களை ஆதரிக்கும் பதிவுகளை நீக்கவும் ஆப்கானிஸ்தான் வல்லுநர்களை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.