அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ஒருவரின் காலில் சிக்கிக்கொண்ட வெடிபொருளை நீக்க, வெடிகுண்டு நிபுணர்களை மருத்துவர்கள் அழைத்துள்ளனர்.
அமெரிக்காவின் டேக்சாஸ் நகரில் உள்ள சான் அண்டோனியா பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைச் சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவரது தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், கால் பகுதியில் வெடிபொருள் சிக்கியிருப்பதை அந்த நபர் தெரிவித்ததை அடுத்து அங்கு பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எக்ஸ்-ரே தகவல்களும் அதை உறுதிசெய்துள்ளன.
இதையடுத்து மருத்துவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மிகவும் விநோதமான இந்த விஷயத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராணுவ வீரரான அந்த நபருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் அந்த வெடிபொருள் அவரது காலில் சிக்கிக்கொண்டது. நேரம் அதிகமானதால் காயம் மேலும் மோசமடைந்தது. அறுவைச் சிகிச்சையின் போது உடலின் திசுக்கள் வெப்பமடைந்து வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க காயத்தில் தொடர்ந்து நீர் ஊற்றி குளிர்வித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கியவர் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளார். இதுவரை பலவிதமான விபத்து சிகிச்சைகளைக் கையாண்டிருந்தாலும், இது புதுவிதமான அனுபவம் தந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.