டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் அதிரடிக்கு பெயர் போனவர். மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாகச் சொல்லக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். உக்ரைன் போரில் அந்நாட்டுக்கு முதலில் உதவி செய்ய பலரும் தயங்கிய நிலையில், தன்னுடைய செயற்கைக்கோள் உதவியுடன் அந்நாட்டு மக்களுக்கு இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்தார். இதற்காக ரஷ்யாவின் கோபத்திற்கும் ஆளானார். இந்நிலையில் அவரை பற்றிய புதிய செய்தி இணைய உலகில் வைரலாகி வருகிறது.
அதாவது அவர் விரைவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாகவும், இதற்காக ட்விட்டர் நிறுவனத்துக்கு 3.3 லட்சம் கோடி வழங்க உள்ளதாகவும் பிரபல ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை அவர் ஏற்கனவே வாங்கியுள்ள நிலையில், தற்போது அவர் முழு நிறுவனத்தையும் கைப்பற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.