ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானின் ஹெராஜ் என்ற நகருக்கு வடமேற்கில் சுமார் 40 கி.மீ. தொலைவில் நேற்று (07.10.2023) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஹெராஜ் நகரத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்நகரைச் சுற்றியுள்ள 6 கிராமங்களில் உள்ள கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இடிபாடுகளில் சிக்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலநடுக்கம் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.