அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே சென்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அங்கேயே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பல சர்ச்சைகள் ஆதாரங்கள் எல்லாம் வெளிவந்த பிறகே சவுதி அரேபியா அரசு கொலை செய்ததை ஒப்புகொண்டது. அதன் பின் அதுதொடர்பாக 18 பேரை சவுதி அரேபியா அரசு கைது செய்தது. ஆனால் இந்த வழக்கு, சம்பவம் நடந்த இடமான துருக்கியிலே நடத்தப்பட வேண்டும் என துருக்கி கூறியது. ஆனால் இந்தக் கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்திருந்தது.
இந்த கொலையில் சம்மந்தப்பட்ட ஐந்து பேருக்கு அரேபிய அரசு மரண தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அரேபிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான எஸ்பிஏ அறிக்கையில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி துருக்கி தூதரகம் சென்ற கஷோக்கி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். பின்னர் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு தூதரகத்திற்கே வெளியே இருந்த மற்றொருவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கஷோக்கியை கொல்ல உலவுத்துறை துணை தலைவர் அகமது அல் அசிரி உத்தரவிட்டதாகவும், அதில் 21 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், கொலையில் ஈடுப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளின் நெருக்கடியால் அரேபிய அரசு தற்போது இந்த கொலையை ஒப்புகொண்டு, கொலையாளியை அடையாளம் காட்டியுள்ளது. ஆனால், இந்த கொலைக்கும் இளவரசரர் முகமத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இந்த படுகொலைக்கு சவுதி இளவரசர்தான் உத்தரவு கொடுத்திருப்பார் என்று சிஐஏ கணித்துள்ளது. இதனை அமெரிக்க பத்திரிகை நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் முதன் முதலில் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த கொலைக்கும் இளவரசருக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று சொல்லிவந்த நிலையில், சிஐஏவின் இந்த கணிப்பு சவுதியின் மறுப்பை பொய்யாக்கி உள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த மதிபீடு உறுதியாகத் தவறானது” என்று மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருந்த அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியா மீது எந்த புதிய தண்டனையும் வழங்க போவதில்லை என்றார். அதிபர் ட்ரம்ப் என்னதான் சவூதி இளவரசருக்கு ஆதராவக இருந்தாலும், அமெரிக்க ஊடகங்கள் மற்றும் சிஐஏ நிறுவனம் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் அமைப்புகள் இந்த கொலையை இன்றும் விமர்சித்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், பத்திரிகையாளர் கஷோகி கொலை தொடர்பாக இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விமர்சிப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். கஷோகி கொலையில் சவூதி மன்னர் மற்றும் இளவரசரின் மான்பை குறைக்கும் எந்த விவாதத்தையும் சகித்துக்கொள்ள முடியாது என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அட்டல் அல்ஜுபர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.