அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று (05-11-24) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் போட்டியில் உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவு வந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 224 வாக்குகளைப் பெற்றார். முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் 277 வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அதிபராகிறார். அமெரிக்கா அதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 277 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருந்த டொனால்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அதிபர் தேர்தலில், மீண்டும் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களில் பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
1885 முதல் 1889 வரை மற்றும் 1893 முதல் 1897 வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்த க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் பிறகு, தொடர்ச்சியாக பதவி வகிக்கும் இரண்டாவது அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ளார். இது கடைசியாக 132 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. அதே போல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 34 குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட டிரம்ப், சட்டப்பூர்வ குற்றச்சாட்டை எதிர்கொண்டு பதவியில் இருக்கும் முதல் அமெரிக்க அதிபராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.