பார்சிலோனா தீவிரவாதத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் உள்ள, உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான லாஸ் ரம்ப்லாஸ் பகுதியில் பொதுமக்கள் கூட்டத்தின் மீது நேற்று மாலை 5.30 மணியளவில், தீடீரென கார் ஒன்று பாய்ந்தது. இதில் 13 பேர் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து உலகம் முழுவதும் மிகப்பெரிய சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுமாதிரியான தீவிரவாதத் தாக்குதல்கள் அப்பகுதியில் நடந்ததே இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 24 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். அதில் தற்போதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்திய சில நிமிடங்களில், தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலிலும் பொதுமக்கள் சிலர் காயமுற்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கல் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
- ச.ப.மதிவாணன்