Skip to main content

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர் ஐ. பெரியசாமி! லண்டன் பயணத்தில் திடீர் மாற்றம்! 

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

In response to Chief Minister M.K.Stalin, Minister I. Periyasamy! Sudden change in London trip!

 


தென்மாவட்ட மக்களின் தெய்வமாக வணங்கக் கூடிய பென்னிகுக்கு தமிழக அரசு சார்பில் லண்டனில் சிலை வைக்கப்படுகிறது. தென்மாவட்டத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டிக் கொடுத்தார். ஆனால் இந்த தென் மாவட்ட தமிழக மக்களுக்காக முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டும்போது இடையில் கட்டுமான பணி பாதிக்கப்பட்டது. அதுனால்  அணை கட்டும் முயற்சியையும் கைவிடுமாறு ஆங்கில அரசு அறிவித்தது. இருந்தாலும் தான் எடுத்த முயற்சியை விடக்கூடாது என்ற முடிவுடன் பென்னிகுக் தனது சொந்த நாடான லண்டனுக்குச் சென்று அங்கு தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கொண்டு வந்து தமிழக மக்களுக்காகவே இந்த முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்தார்.

 

dmk

 

அதனாலேயே தென் மாவட்ட மக்கள் பென்னிகுக்கை கடவுளாக நினைப்பதும் தங்கள் பிள்ளைகளுக்கும், கடை, வியாபார ஸ்தலங்களுக்கும் அவரது பெயரை வைத்து வழிபட்டு வருகிறார்கள். அதோடு பென்னிகுக் பிறந்த நாளான பொங்கல் பண்டிகை அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பென்னிகுக்காகவே பொங்கல் வைத்து வழிப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல் தமிழக அரசும் பென்னிகுக் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்திருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் தேக்கடியில் பென்னிகுக் சிலையை தமிழக அரசு வைத்துள்ளது. கூடலூர் லோயர் கேம்பில் பென்னிகுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மணிமண்டபம்  கட்டி 6 அடி உயரத்தில் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். அதுபோல் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பென்னிகுக் சிலை உள்ளது. உத்தம பாளையத்திலும் சிலை உள்ளது. இப்படி தென் மாவட்ட மக்களுக்காக வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்த பென்னிகுக்கை தென் மாவட்ட மக்களும் அரசும் தொடர்ந்து மரியாதை கொடுத்து வருகிறார்கள்.

 

dmk

 

இந்த நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற சில மாதங்களிலே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த பென்னிகுக்கு அவரது சொந்த நாடான லண்டனில் சிலை வைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள தமிழ் சங்கம் மூலம் ஏற்பாடு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் பென்னிகுக் சிலை லண்டனில் வைக்க அனுமதி அளித்தது தொடர்ந்து, அடுத்த மாதம் 10ம் தேதி பென்னிகுக் சிலையைத் தமிழக அரசு சார்பில் திறக்க இருக்கிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலினை பாராட்டியும், பென்னிகுக் சிலையைத் திறந்து வைக்க வருகைதரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரை பாராட்டியும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், லண்டனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் முல்லைப் பெரியாறு அணையில் பென்னிகுக் இருப்பது போலவும் அதோடு முதல்வர் ஸ்டாலின் படத்தையும் சிலையைத் திறந்து வைக்க வருகை தரும் அமைச்சர் ஐ பெரியசாமி படத்தையும் போட்டு அங்குள்ள தமிழ்ச் சங்கம்  விளம்பரப் பலகை வைத்து இருக்கிறது. 

 

இந்நிலையில் வருகிற 10ம் தேதி லண்டனில் பென்னிகுக் சிலையை திறந்து வைப்பதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று திண்டுக்கல்லிலிருந்து சென்னை புறப்பட்டார். திண்டுக்கல், தேனி மாவட்டம் முழுவதும் லண்டன் செல்லும் அமைச்சர் ஐ.பெரியசாமியை பாராட்டி ப்ளக்ஸ் பேனர்களும், வால் போஸ்டர்களும் அங்கங்கே அடித்து ஒட்டியிருந்தனர். 

 

இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் சென்று அங்கு பென்னிகுக் சிலையை திறந்து வைக்க இருக்கும் ஐ.பெரியசாமிக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில்குமார் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கூடலூர் ராஜா, திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் ஜெயன், ரெக்ஸ், 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபாஷ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக திரண்டு அமைச்சரை வாழ்த்தி லண்டனுக்கு அனுப்பி வைத்தனர். 

 

அப்போது ஐ.பெரியசாமியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, “தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு முல்லைப்பெரியாறு அணையை பென்னிகுக் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அப்படிப்பட்ட பென்னிகுக் சிலையை லண்டனில் திறந்து வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். முதல்வர் ஸ்டாலின் தான் பென்னிகுக் சிலையை திறந்து வைக்க லண்டன் செல்வதாக இருந்தது. வேலைப் பளுவின் காரணமாக என்னை அனுப்பி இருக்கிறார். முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்