கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகர போலீஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. உலகையே உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், மினியாபோலிஸ் நகரத்திற்கு அருகேயுள்ள புரூக்ளின் சென்டர் நகரில், டான்ட் ரைட் என்ற 20 வயதேயான இன்னொரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புரூக்ளின் சென்டர் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக டான்ட் ரைட்டை கைது செய்ய முயற்சித்ததாகவும், அப்போது அவர் காருக்குள் மீண்டும் ஏறிக்கொண்டுவிட்டதாகவும், அந்தநேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி டான்ட் ரைட்டை சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சுடப்பட்ட டான்ட் ரைட் சிறிது தூரம் வண்டியை ஓட்டிச் சென்று, வேறொரு வாகனத்தில் மோதியதாக தெரிவித்துள்ள போலீஸார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது காரில் இருந்த அவரது தோழி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் இருந்து இறங்கிய டான்ட் ரைட்டை காவல்துறையினர் சுட்டனர் என அவரது தோழி கூறியதாக டான்ட் ரைட்டின் தாயார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தாயார், டான்ட் ரைட்டை காவல்துறையினர் காரிலிருந்து வெளியே இழுத்தபோது, அதுபற்றி கூற தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், அப்போது அழைப்பை துண்டிக்குமாறு போலீஸார் கூறியது தனக்கு கேட்டதாகவும், பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அழைப்பை துண்டித்ததாகவும் டான்ட் ரைட்டின் தாயார் கூறியுள்ளார்.
இந்தநிலையில், டான்ட் ரைட்டுக்கு நீதிகேட்டு புரூக்ளின் சென்டரில் போராட்டம் வெடித்துள்ளது. மேலும் போராட்டக்காரர்கள் போலீஸாரோடு மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. இதனைத்தொடர்ந்து புரூக்ளின் சென்டர் நகரில், அந்நாட்டு நேரப்படி காலை 6 மணிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.