இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மனித உரிமை அமைப்புகள் சர்வதேச நாடுகளும் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாலஸ்தீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ஐநா வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை இஸ்ரேல் போர் தொடர்ந்து வரும் நிலையில் காசாவில் இருந்து சுமார் 3.38 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காசாவில் 22 லட்சம் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் 11 சதவிகித மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதும் தீவிர தாக்குதல் தொடர்ந்து வருவதால் காசாவில் மீதம் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது.