சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 20,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 490 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் ஒருவரை, சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
வுஹான் நகரின் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றி வந்த லீ எனும் மருத்துவர், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி, நோயாளி ஒருவரை பரிசோதித்துள்ளார். அப்போது அவருக்கு சார்ஸ் வைரஸ் தோற்று இருக்கலாம் என லீ சந்தேகித்துள்ளார். இதுகுறித்து சக மருத்துவர்களிடம் எச்சரித்தும் உள்ளார். மேலும், மருத்துவர்களையும் முகக்கவசம் அணியும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதனை யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத சூழலில், சுகாதார துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் மருத்துவர் லீயை சந்தித்து, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான பொய் தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி கூறி, அவரிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்று சென்று இருக்கிறார்கள். இருப்பினும் இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் மருத்துவர் லீ பதிவிட்டுள்ளார்.
இந்த சூழலில் தான் சீனாவில் கரோனா என்ற சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் பரவ ஆரம்பித்தது கண்டறியப்பட்டுள்ளது. மிக வேகமாக பரவிய இந்த கரோனா மருத்துவர் லீயையும் தாக்கியுள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி மருத்துவர் லீயும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் தற்போது அரசு அதிகாரிகள் லீயிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். கரோனா குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவரை சீன மக்கள் பாராட்டி வருகின்றனர். அதேநேரம், இந்த விஷயத்தை அலட்சியம் செய்து மூடிமறைக்க முயன்ற சீன அதிகாரிகளை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.