ஐந்து வருட திட்டமிடலுக்கு பிறகு சீனா, தங்களது அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்ஸியை வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக உலகின் மிகப்பெரிய நாடுகள் அனைத்தும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள சூழலில், சீனா தற்போது கரோனாவிலிருந்து மீண்டுள்ளது. அந்நாட்டின் தொழில்துறையில் வழக்கம்போல இயங்க ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில் தங்கள் நாட்டின் அதிகாரபூர்வ டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை அந்நாடு வெளியிட்டுள்ளது. தற்போது இதன் பயன்பாட்டின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ள சூழலில், விரைவில் இந்த டிஜிட்டல் கரன்ஸிகள் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டம் விரைவில் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டே சர்வதேச தொழில்கள் இயங்கிவரும் சூழலில், இந்த டிஜிட்டல் கரன்ஸி முறை, விரைவில் டாலர் பயன்பாட்டை குறைக்கும் என நம்பப்படுகிறது. டிஜிட்டல் கர்ன்ஸி எலக்ட்ரானிக் பேமெண்ட் (DC/EP) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பயனாளர்கள் தங்களது மொபைல் வாலட்டில் இந்த பணத்தை சேமித்து இதனை கடைகள் முதல் வங்கிகள் வரை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிதான இந்த பரிவர்த்தனை முறையால் விரைவில் உலக பொருளாதாரம் சீனாவின் இந்த கரன்ஸியை சுற்றி சுழல ஆரம்பிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். சீனாதான் வேண்டுமென்றே கரோனா வைரஸை பரப்பியதாக உலகநாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அந்நாட்டின் இந்த புதிய திட்டம் அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தற்போதைய சோதனை ஓட்டத்தில் ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களும் பங்கெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.