நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியின் பதவியைக் காப்பாற்ற, அந்நாட்டு அரசியலில் சீனா தலையிடுவதாக வெளிவந்துள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சில பகுதிகளைத் தங்களது எல்லைக்குள் சேர்த்து நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பிரச்சனையை மனதில் வைத்து இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி குற்றம் சாட்டினார். இந்நிலையில், அவரது சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக குரலெழுப்ப ஆரம்பித்துள்ள நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் சார்ந்துள்ள நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இவருக்கு எதிராகக் காய்நகர்த்தி வரும் சூழலில், நேபாள குடியரசுக் கட்சியும் சர்மா ஒலியை எதிர்த்து வருகிறது.
இந்நிலையில், நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜாலா நாத் கனால், மாதவ் குமார் நேப்பாள், உள்ளிட்டோரைச் சீனத் தூதர் ஹோ யாங்கி சந்தித்துப் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நேபாள குடியரசுக் கட்சித் தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் அவர் சந்தித்துள்ளார். இந்தச சந்திப்புகளின் முக்கிய நோக்கம் சர்மா ஒலியின் பதவியைக் காப்பாற்றுவதே ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சர்மா ஒலியைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்க முயன்று வரும் முன்னாள் பிரதமர் பிரசன்டா மட்டும் சீனத் தூதரைச் சந்திப்பதைத் தவிர்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சீனாவின் ஆதரவில் தான் சர்மா ஒலி இந்தியாவை எதிர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், நேபாளத்தின் முக்கியத் தலைவர்களுடன் சீனத் தூதர் சந்திப்பு மேற்கொண்டுள்ளது மேலும் பல புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.