இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தோன்றியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என சீன ஆராய்ச்சி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது, 14 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. இந்த வைரஸ் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், சீனா இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தோன்றியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என சீன ஆராய்ச்சி ஒன்றில் கூறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரியல் அறிவியலுக்கான ஷாங்காய் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஆராய்ச்சி முடிவுகளின்படி, சீனாவில் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டாலும், அது சீனாவில் உருவாகவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், அமெரிக்கா, இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தோன்றியிருக்கலாம் எனவும், குறிப்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இந்த வைரஸின் பிறழ்வுகள் குறைவாக இருப்பதாலும், சீனாவுக்கு அருகில் இவர்கள் இருப்பதாலும் இந்நாடுகளில் தோன்றிய கரோனா வைரஸ் மீன்கள் மூலமாகச் சீனாவுக்கு வந்திருக்கலாம். எனவே இந்த வைரஸ் இந்திய துணைக்கண்டத்தில் தோன்றியிருக்கவே வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தங்களது நாட்டில் தோன்றவில்லை என நிரூபிக்க முயன்று வரும் சீனா வேண்டுமென்றே இதில் இந்தியா மீது பழிசுமத்துவதாகக் கருத்துகள் எழுந்து வருகின்றன.