கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இத்தாலி, பிரிட்டனை விஞ்சியுள்ளது ரஷ்யா.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2.8 லட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளையும் தனது கோரப்பிடியில் போட்டு ஆட்டிப்படைத்து வருகிறது கரோனா. இதில், ரஷ்ய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கரோனா பரவல், தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த எட்டு நாட்களில் அந்நாட்டில் புதிதாக 80,000 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் 2.2 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், ரஷ்யாவில் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.