சீனா அரசு, அண்மைக்காலமாக தங்கள் நாட்டுக் குழந்தைகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் சீனாவின் கல்வி அமைச்சகம், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே சிறுவர்/சிறுமியர் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டுமென்றும், அதிலும் ஒரு மணிநேரத்திற்கு மேல் விளையாடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் தற்போது, குழந்தைகளின் நடத்தை மோசமாக இருந்தாலோ அல்லது அவர்கள் தவறு செய்தாலோ அவர்களது பெற்றோரைத் தண்டிக்கும் வகையில் சீனா தற்போது சட்ட முன்வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளது. குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டிற்கும் அந்த சட்ட முன்வரைவில், குழந்தைகள் மோசமாக நடந்து கொண்டாலோ அல்லது தவறு செய்தாலோ அவர்களின் பெற்றோர் கண்டிக்கப்படுவதுடன் குடும்ப கல்வி வழிகாட்டுதல் பயிற்சிகளைப் படிக்குமாறும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
"இளம் பருவத்தினர் தவறாக நடந்துகொள்வதற்குப் பல காரணங்கள் உள்ளன, குடும்பக் கல்வி இல்லாதது அல்லது பொருத்தமற்றதாக இருப்பது முக்கிய காரணம்" என இந்த புதிய சட்டம் குறித்து சட்டமன்ற அலுவல்கள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்டத்தில், குழந்தைகளுக்கு விளையாடவும், ஓய்வெடுக்கவும், உடற்பயிற்சி செய்யவும் நேரம் ஒதுக்குமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.