ஆகஸ்ட் மாத மத்தியில் கரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிப் பணிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவில் நடைபெற்று வந்த ஆராய்ச்சி ஒன்றில், கரோனா தடுப்பூசி மனிதர்களிடையே வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் முதற்கட்ட சோதனையில் 18 பேருக்கும், இரண்டாம் கட்ட சோதனையில் 20 பேருக்கும் இந்தக் கரோனா தடுப்பூசி போடப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆராய்ச்சி முடிவுகளில் இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் மருந்துகள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆய்வாளர் எலெனா ஸ்மோல்யார்ச்சுக், ரஷ்யச் செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து கூறுகையில், தடுப்பூசிக்கான மனிதச் சோதனைகள் பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், தன்னார்வலர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். மேலும், மனிதர்கள் மீதான ஆராய்ச்சிகள் முடிவடைந்த சூழலில், தடுப்பூசி பாதுகாப்பானது எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தத் தடுப்பூசியை ஆகஸ்ட் 12 - 14 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வரையறைப்படி மூன்று கட்ட பரிசோதனைகளைக் கடந்தால் மட்டுமே தடுப்பூசியைச் சந்தைப்படுத்த முடியும் என்ற சூழலில், இரண்டு கட்ட ஆய்வுகளை மட்டுமே முடித்துள்ள இந்த மருந்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.