வீட்டுப்பாடம் செய்யாத மாணவி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வீட்டுப்பாடம், தேர்வுகள் நடத்துவது ஆகியவை ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் ஆன்லைன் வகுப்பு ஒன்றில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை முடிக்காத சிறுமி ஒருவருக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகனில் வசித்து வரும் 15 வயது மாணவியான கிரேஸ், கவனக்குறைவு கோளாறால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
இவருக்கு அண்மையில் ஆன்லைன் வகுப்பில் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை எனக்கூறி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் ஒரு நீதிபதி. இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காததாகவும், தாயுடன் சண்டையிட்டதாகவும், திருடியதாகவும் குற்றம்சாட்டி அந்த சிறுமியைச் சிறையில் அடைத்தது. நீதிபதியின் இந்த தீர்ப்பு அமெரிக்காவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராகப் பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மிச்சிகன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.