கரோனா வைரசால் சீன பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பரிசு கூப்பன்களை வழங்கி வருகிறது சீனா.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது. சீனாவில் 80,967 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவின் பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. இந்த சூழலில், தற்போது சீனாவில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது சீனா.
அதன்படி, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முக்கிய வழிமுறையாக, மக்களின் வாங்கும் திறனை அதிகரித்தலில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது சீனா. இதன்மூலம் நுகர்வு தேவை அதிகரிக்கும் என்பதால் மீண்டும் தொழில்துறை வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் எனக் கணித்துள்ளது சீன அரசு. இதனால், சீனா முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்களுக்குப் பரிசு கூப்பன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது சீன அரசு. அதன்படி சீனாவின் நாஞ்சிங்கில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் 338 கோடி ரூபாய் வரை பரிசு கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மக்காவோ பகுதியில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிற்கும், கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிற்கும் பொதுமக்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன.