கடந்த ஆறு வாரங்களாக சீனாவில் குறைந்திருந்த, புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது திடீரென உயர்ந்துள்ளது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கரோனாவின் இரண்டாவது அலை சீனாவில் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தையும் இது எழுப்பியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற பல உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து, லட்சக்கணக்கானவர்கள் உயிரைப் பறித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் இந்த வைரஸின் தாக்கம், கடந்த ஆறு வாரங்களாகக் குறைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்ட சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் அந்நாட்டில் 108 பேருக்கு புதிதாக கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 98 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள ஹைலோஜியாங் மாகாணத்தில் 58 பேருக்கு கரோனா தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த எல்லைப் பகுதியைச் சீனா தீவிரமாகக் கவனித்து வருகிறது. ஏற்கனவே கரோனாவிலிருந்து குணமான நபர்களுக்கு மீண்டும் தோற்று ஏற்பட்டு வருவது அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், புதிதாக கரோனா தொற்று ஏற்படுவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.