இந்தியாவில் சீன செயலிகள் தடைசெய்யப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களை சீனா தடை செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே பதட்டமான சூழல் நிலவிவந்த நிலையில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் கடந்த 15 ஆம் தேதி இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ள சூழலில், சீனா அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களை தங்களது நாட்டில் தடை செய்துள்ளது.
சீன செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்கள் இந்தியாவில் இன்னும் அணுகக்கூடியதாக இருந்தாலும், சீனாவில் உள்ளவர்கள் VPN பயன்படுத்தி மட்டுமே இனி இந்திய ஊடக செய்திகளை தெரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய செய்தித்தாள் சங்க தலைவர் ஷைலேஷ் குப்தா, "இந்தியாவில் சீன ஊடகங்களுக்கான அனைத்து வகையான அணுகல்களையும் தடைசெய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்திய ஊடகத்துறையில் சீன நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.