கூகுள் நிறுவனத்தில் சாதிப்பாகுபாடு இருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
'ஈக்குவாலிட்டி லேப்' என்ற அமைப்பினை சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சவுந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கிற்கு கூகுள் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்திருந்தது. கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கூகுள் நியூஸ் பிரிவின் திட்ட மேலாளர் தனுஜா குப்தாவிடம் கூகுள் நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து தனுஜா குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஊழியர்களுக்கு இடையிலான சாதிப் பாகுபாட்டை கூகுள் ஆதரிப்பதாக தனுஜா குப்தா தெரிவித்திருந்தார். அதேபோல் தனுஜா குப்தாவுக்கு ஆதரவாக 'ஈக்குவாலிட்டி லேப்' அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில், 'இந்தியாவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சுந்தர்பிச்சை சாதி கட்டமைப்புகள் பற்றி அறியாதவர் அல்ல' என விமர்சனத்தை முன் வைத்துள்ளது. 'தேன்மொழி சவுந்தர்ராஜன் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பரப்புரையில் ஈடுபடுபவர். எனவே அவர் பங்கேற்கும் கருத்தரங்கு கூகுள் நிறுவன ஊழியர்கள் இடையே சாதி பாகுபாட்டை ஏற்படுத்தும் என்பதாலேயே அவர் பங்கேற்க இருந்த கருத்தரங்கிற்கு தடை விதிக்கப்பட்டது' என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.