ஹஜ் யாத்திரீகர்களுக்காக ஜித்தாவில் இரத்த தான முகாம்
உலகெங்கிலுமிருந்து ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வரும் ஹஜ் யாத்திரீகர்களில் தேவைப்படுவோருக்காக நேற்று (18-08-2017 வெள்ளிக்கிழமையன்று) சவுதி அரேபியா, ஜித்தாவில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
ஜித்தாவிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமில் 140 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 125 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இந்த முகாமில் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா கர்நாடகா, உ.பி உட்பட இந்தியாவின் பல பகுதியை சேர்ந்தவர்களும் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், சூடான் உட்பட பல நாட்டவர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல செயலாளருமான சலாஹ_தீன் இந்த முகாம் பற்றி கூறும் போது,
உலகெங்கிலுமிருந்து ஹஜ்ஜூக்கு வருகை தருபவர்களில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்ற காரணங்களுக்காக இரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் மற்றும் ரமலான் மாத உம்ரா பயணிகளுக்காகவும் இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம் போன்ற தினங்களில் தொடர்ந்து இது போன்ற முகாம்களை ஏற்பாடு செய்து வருகின்றோம். இது தவிர அவசர தேவைக்காக அடிக்கடி இரத்ததானம் செய்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.
கிங்.பஹத் மருத்துவமனையின் இரத்ததான பிரிவு முதன்மை அதிகாரி டாக்டர்.இமாதின் ஒத்துழைப்பில் இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் அலி உமர் ஹமது சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்தார்.
கொடையாளிகளுக்கு நன்றி தெரிவித்து பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹம்மது முனாஃப், 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில் ஜித்தா மட்டுமின்றி ரியாத், தம்மாம் நகரங்களிலும் துபாய், மஸ்கட் போன்ற வளைகுடா நாடுகளிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்ததான முகாம்களை நடத்தியுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, மும்பை மற்றும் தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இது ஜித்தா மண்டலம் நடத்தும் 16 வது இரத்ததான முகாமாகும் என்று குறிப்பிட்டார்.