பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை வங்கதேசம் அறிமுகப்படுத்த உள்ளது.
வங்கதேசத்தின் தென்கிழக்கு மாவட்டமான நோகாலியில் 37 வயதான பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் மிரட்டி தொடர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளது. இதுகுறித்த செய்தி கடந்த வாரம் வெளியாகி அந்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் பெண் மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது.
மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்த சூழலில், பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை வங்கதேசம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ அல்லது வாழ்நாள் சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.