வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகியதோடு, நேற்று ஹெலிகாப்டர் மூலம் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளது. ஜஸ்ஸோர் நகரில் உள்ள 'ஜூபைர்' என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக 24 பேர் எரித்துக் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ வைத்து எரிக்கப்பட்ட அந்த நட்சத்திர ஹோட்டல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவருக்கு சொந்தமானது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.