முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அர்மீனியா-அஜர்பைஜான் இடையே நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
1994 பிரிவினை போருக்குப் பின்னர் அர்மீனியா-அஜர்பைஜான் எல்லைப்பகுதியில் உள்ள நாகோர்னோ-காராபாக் எனும் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்த இருநாடுகளும் இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. சுமார் 30 ஆண்டுகாலமாக நீடித்துவந்த இந்த பிரச்சனை கடந்த செப்டம்பர் மாதம் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையேயான மோதலாக வெடித்தது. சர்ச்சைக்குள்ளான பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானது என்றாலும், அர்மீனிய இனத்தவர்களே அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் முதல் நடைபெற்ற மோதலில், ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து நாளுக்குநாள் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் அதிகரித்துவந்த சூழலில், உலக நாடுகள் பலவும் இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுத்தன. இதில் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை மூலம் தற்போது போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மாஸ்கோவில் அர்மீனியா-அஜர்பைஜான் நாடுகளுக்கிடையே ரஷ்யா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, சர்ச்சைக்குரிய பகுதியில் கிடக்கும் உடல்களை ஒப்படைப்பது, கைதிகளை விடுவிப்பது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.