ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்களை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
பல்வேறு தொழில்நுட்ப பொருட்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹைட்ரேட் ஸ்பார்க் வாட்டர் பாட்டில் எனவும், ஹைட்ரேட் ஸ்பார்க் ஸ்டீல் வாட்டர் பாட்டில் எனவும் இருவகையில் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாட்டர் பாட்டில்களில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கிருமித் தொற்று இல்லாமல் பாதுகாக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரேட் ஸ்பார்க் வாட்டர் பாட்டிலை ப்ளூடூத் உடன் இணைக்க வேண்டும். அதன்பிறகு ஆப்பிள் ஹெல்த் செயலியில் உள்ள தகவலின் மூலம் குறிப்பிட்ட பயனாளியின் உடலுக்கு தேவையான நீரின் அளவை தெரிந்து கொள்வதோடு எவ்வளவு நீர் பயன்படுத்தப் பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்களில் நீர்க் கசிவைத் தடுக்க ஸ்பவுட் கொடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரேட் ஸ்பார்க் ஸ்டீல் வாட்டர் பாட்டில் துருப்பிடிக்காத ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் 6,129 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹைட்ரேட் ஸ்பார்க் பாட்டில்கள் ட்ரிடன் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. பச்சை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை 4,596 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.