இந்திய பிரதமர், அண்மையில் லட்சத்தீவுக்கு அரசு முறை பயணமாகச் சென்று வந்தார். அவர் சென்று வந்த புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து சில கருத்துகளைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். பிறகு மாலத்தீவு அதிபர் அவர்களைத் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “லட்சத்தீவுக்கு அருகில் இருக்கும் தீவு மாலத்தீவு. மாலத்தீவை கைப்பற்ற நினைத்தபோது, இந்திய அரசுதான் தனது ராணுவத்தை அனுப்பி, மாலத்தீவை மீட்டுக் கொடுத்தது. அன்றிலிருந்து நமக்கும் மாலத்தீவுக்கும் ஒரு ஒப்பந்தம் முடிவானது. அந்த ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தின் ஒரு குழு எப்போதும் மாலத்தீவில் பாதுகாப்புக்காக இருக்கும். அதேபோல், மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவில் இருந்து ஒரு ஐ.பி.எஸ். ஆபிசர் நியமிக்கப்படுவார்.
ஆனால், தற்போது மாலத்தீவின் அதிபராக வந்திருப்பவர் தேர்தலின்போது, தனது டி-ஷர்டில், ‘நோ இந்தியா.. ஆண்டி இந்தியா.. நோ ஃபோர்ஸ்’ என வாசகங்கள் பொறித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிறகு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்கள். ஆட்சிக்கு வந்ததும், இந்திய ராணுவத்தை பின் வாங்க வேண்டும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை திரும்பப் பெறவேண்டும் எனத் தெரிவித்தனர்.
எப்போதுமே மாலத்தீவுக்கு அதிபராக பொறுப்பேற்பவர், முதலில் இந்தியாவுக்கு தான் பயணம் மேற்கொள்வார். ஆனால், தற்போதைய மாலத்தீவு அதிபர், முதலில் துருக்கிக்கும் இரண்டாவதாக சீனாவுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது சீனா, அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிடுகிறது. அந்த அறிக்கையில், ‘இந்தியா இதனை குறுகிய மனப்பான்மையில் இல்லாமல் பரந்த மனப்பான்மையில் பார்க்க வேண்டும்’ என்கிறது.
மாலத்தீவுக்கு ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சுற்றுலா செல்கிறார்கள். அதில், 25% பேர் இந்தியர்கள். அதாவது 3 லட்சம் பேர் இந்தியாவிலிருந்து செல்கிறார்கள். இதன் மூலம், நான்கில் ஒரு பங்கு சுற்றுலா வருமானத்தை இந்தியா கொடுக்கிறது. அதுவே, லட்சத் தீவுக்கு செல்லக்கூடிய இந்தியர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம்.
தற்போது பிரதமர் இந்தியாவில் இருக்கக்கூடிய தீவை (லட்சத்தீவு) ஊக்குவிக்கிறார். லட்சத் தீவு சென்ற பிரதமர், அந்தத் தீவு குறித்து பல விஷயங்களை அவரே காண்பித்தார். இதனைத் தொடர்ந்து மாலத்தீவின் இரு அமைச்சர்களும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், இந்தியாவைக் குறித்து அவதூறாக கருத்துகளை பதிவிட்டனர்.
இந்தியாவில் இருக்கக்கூடிய டி.சி.எஸ். நிறுவனத்தின் பணியாளர்கள் மாலத்தீவின் மக்கள் தொகையைவிட அதிகம். அந்தமான் நிக்கோபார் தீவுகளுடன் ஒப்பிடும்போது, மாலத்தீவு தீப்பெட்டியில் இருக்கும் ஒரு தீக்குச்சி.
இதனால் தற்போது இந்தியர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். சச்சின், சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் நம் நாட்டின் கடற்கரை சுற்றுலா தளங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அரசு அச்சம் கொண்டு அந்த மூவரையும் இடைக்கால நீக்கம் செய்கிறது. நாம் மாலத்தீவின் தூதரை அழைத்து நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம்” என்று தெரிவித்தார்.