தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், ஆதரவான பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தலிபான்களின் வாட்ஸ் ஆப் கணக்குகளும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க சட்டப்படி தலிபான் ஒரு பயங்கரவாதம் இயக்கம் என்பதால், அவர்களது தகவல் தொடர்பைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மற்றொரு சமூக வலைத்தளமான ட்விட்டர், தலிபான்கள் விவகாரத்தில் தங்களது கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் ட்விட்டர் வாயிலாக உதவிகளைக் கேட்டு வருவதாகக் கூறியுள்ள அந்நிறுவனம், மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வன்முறையைக் கொண்டாடும் ட்விட்டர் பதிவுகள் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு முதல் முறையாக தலைநகர் காபூலில் செய்தியாளர்களுக்கு தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேட்டியளித்தார். அதில், "அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர உதவிய ஆப்கானிஸ்தான் மக்களுக்குப் பாராட்டுகள் என்று பேச்சைத் தொடங்கினார் அவர். ஆப்கானிஸ்தான் மண்ணை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். தங்கள் ஆட்சியை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "காபூலில் உள்ள பன்னாட்டுத் தூதரகங்களைப் பாதுகாக்க உறுதி அளிக்கிறோம். யாரையும் பழிவாங்கும் எண்ணம் தலிபானுக்கு இல்லை. ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிய பிறகு தலைநகர் காபூலின் நுழைவு வாயிலில் போராட்டத்தை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டோம். ஆனால், எதிர்பாராத விதமாக அரசு தோல்வி அடைந்து வெளியேறிவிட்டது. அவர்களால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. வெளிநாட்டு அமைப்புகள், தூதரகங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிப்போம். பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் அளிக்கப்படும். அவர்கள் பணியில் இருந்தாலும், எந்தச் செயலில் இருந்தாலும் அனுமதிக்கப்படுவர். சமுதாயத்தில் முக்கியமானவர்களாக பெண்கள் உள்ளனர். ஷரியத் சட்டப்படி பெண்களுக்கு உரிமை வழங்கப்படும்" என்று கூறினார்.
இச்சூழலில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்த மாறுபாட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், பள்ளிகளுக்குச் சென்று வந்த சிறுமிகளுக்கு தலிபான்கள் முழு உடலையும் மறைக்கும் பர்தாவை வழங்கினர். அதேபோல், டோலோ செய்தி தொலைக்காட்சியில் பெண் நெறியாளர் ஒருவர், தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நேர்காணல் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தலிபான்கள் கூறினாலும், பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சில இடங்களில் பத்திரிகையாளர்களைத் தேடி தலிபான்கள் வீடு வீடாகச் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், முந்தைய அரசால் சிறையில் அடைக்கப்பட்ட பலரை தலிபான்கள் விடுவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.