ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான சண்டைத் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் சென்று விடும் நிலை உருவாகியுள்ளது.
1990- களின் முற்பகுதியில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதனை அகற்ற உருவாக்கப்பட்டக் குழுவினரே தலிபான்கள். சோவியத் யூனியன் உடனான அதிகார போட்டியில் ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்காதான் தலிபான்களை வளர்த்ததாக சொல்லப்படுவதும் உண்டு. 1996- ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலிபான்கள், கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தி ஆட்சி செய்து வந்தனர். எனினும், அவர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதற்கிடையில், கடந்த 2001- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11- ஆம் தேதி ஒசாமா பின்லேடனின் அல்கய்தா அமைப்பு அமெரிக்காவில் பயங்கர தாக்குதலை நடத்தியது. அப்போது, ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் அடைக்கலம் புகுந்தார். ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள் மறுத்ததைத் தொடர்ந்து, கடந்த 2001- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மண்ணில் இறங்கி தலிபான்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தியது.
கடந்த 2004- ஆம் ஆண்டு தலிபான்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசு அமைந்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 2014- ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி விடும்.
இதனை பயன்படுத்திக் கொண்டு தலிபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை மீறித் தாக்குதலை நடத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் சுமார் 65% நிலப்பரப்பு தலிபான் பயங்கரவாதிகள் வசம் சென்றுவிட்டது. 11 முக்கிய நகரங்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்று இருப்பதால், அங்கிருந்து தப்பித்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூலை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இதேநிலை தொடருமானால், ஒரு மாதத்தில் காபூலை தவிர பிற பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி விடுவார்கள் என்றும், மூன்று மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்றும் அமெரிக்க உளவு அமைப்பு கணித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கள் மக்களை ஆபகானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றன. கிட்டத்தட்ட உலக நாடுகளால் தனித்து விடப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அரசு செய்வதறியாமல் திகைத்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் செல்வது பயங்கரவாதத்தை மேலும் வளர்த்தெடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஆபத்தைத் தெரிந்திருந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைதிக் காப்பது தான் வியப்பாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் வளர்வது உலகிற்கு ஆபத்து. குறிப்பாக, அண்டை நாடாக இருக்கும் இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும்.
தற்போதைய நிலையில், சண்டையை முடிவுக்கு கொண்டு வர அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள தலிபானுக்கு ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.