Skip to main content

குடும்ப தகராறு காரணமாக 9 பேர் சுட்டுக்கொலை; பாகிஸ்தானில் பயங்கரம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

9 people shot passed away due to family dispute in Pakistan

 

பாகிஸ்தானில் உள்ள வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துங்குவா அருகில் மலகாண்ட் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாகிஸ்தானில் உள்ள வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துங்குவா அருகில் மலகாண்ட் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு குழந்தைகளோடு தனது தந்தை வீட்டிற்கு இளம்பெண் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த வாலிபர் தனது மனைவியை அடிக்கடி சமாதானம் செய்துள்ளார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

 

இதனையடுத்து, அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நேற்று இரவு நுழைந்திருக்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் தனது குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கண்ட வாலிபர், தான் கொண்டு வந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். மேலும், மனைவியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தைகளையும் சுட்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் உள்ள அறையில் இருந்தவர்கள் சம்பவம் நடந்த அறைக்கு வந்து தாக்குதல் நடத்திய வாலிபரையும் அவரது நண்பர்களையும் தடுக்க முயன்றுள்ளார்கள். ஆனால், அவர்கள் மீதும் தனது நண்பர்கள் துணையோடு துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.

 

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து மனைவி, குழந்தைகள் உள்பட 9 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காகவும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடிய வாலிபரையும் அவரது நண்பர்களையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்