நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 76 பேர் நேற்று விடுதலை
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை செல்ல உள்ள நிலையில், நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 76 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டி வருவதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. தற்போது இலங்கை சிறைகளில் 80 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 160 படகுகளும் இலங்கை அரசின் வசம் உள்ளன. இந்திய பெருங்கடல் மாநாடு இலங்கையில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். இதை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக, தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பரிந்துரை நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்படுகின்றனர்.