மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதில் வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுபோன்ற புகார்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்சிகள் மீது வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உலகில் நடந்த தேர்தல்களிலேயே மிகவும் மோசமானது என வர்ணிக்கப்படுவது 1927 ஆம் ஆண்டு லைபீரியா நாட்டில் நடந்த பொது தேர்தல் தான்.
நவீன வாக்கு இயந்திரங்கள் இல்லாமல் வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்ட அந்த காலத்தில் நடத்தப்பட்ட ஒரு தேர்தல் தான் இன்று வரை உலகின் மிக மோசமான தேர்தலாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட உலகின் மோசமான தேர்தலை நடத்தியவர் சார்லஸ் கிங் என்ற லைபீரியா நாட்டு அரசியல்வாதியாவார்.
ஆப்பிரிக்காவின் ‘ட்ரூ விக் பார்ட்டி’ என்ற கட்சியை சேர்ந்த இவர், 1920ன் ஆம் ஆண்டு லைபீரியா நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் நடந்த அடுத்த தேர்தலிலும் இவரே வெற்றிபெற்றார். இந்நிலையில் தனது மூன்றாவது அதிபர் தேர்தலை சந்தித்தபோது தோல்வி பயம் அவரை தொற்றிக்கொண்டது. எனவே தேர்தல் நாளில் நாடு முழுவதும் உள்ள தனது ஆட்களை வைத்து அனைத்து இடங்களிலும் கள்ள வாக்குகளை பதிவிட செய்தார். வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் எதிர்கட்சியினருக்கு மட்டுமின்றி அந்த நாட்டு மக்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
வெறும் 15,000 வாக்காளர்களை மட்டுமே கொண்ட அந்த நாட்டில் 2,52,000 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 9000 வாக்குகள் எதிர்கட்சிக்கும், மீதமுள்ள 2,43,000 வாக்குகள் சார்லஸ் கிங்குக்கும் பதிவாகியிருந்த. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் மீண்டும் அவரே அதிபராக பொறுப்பேற்று அடுத்த 3 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இப்படி 1927 ஆம் ஆண்டு லைபீரியாவில் நடந்த இந்த தேர்தலே இன்று வரை உலக அளவில் மிக மோசமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே மோசமான தேர்தல் என்று கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இவரின் கட்சி லைபீரியா நாட்டை 100 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதில் இவர் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.