பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.
இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக மீட்டனர்.
பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.