Skip to main content

ட்ரம்ப், கிம் சந்திப்பு விரைவில் நடைபெறும்! - தென்கொரிய பிரதமர் உறுதி

Published on 27/05/2018 | Edited on 27/05/2018

ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நிச்சயம் நடைபெறும் என தென் கொரிய பிரதமர் லீ நக் யோன் தெரிவித்துள்ளார். 
 

Kim

கொரிய தீபகற்பத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த போர்ப்பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது இருநாட்டு அதிபர்களுக்கு இடையிலான சந்திப்பு. கொரிய நாடுகளின் எல்லையில் வைத்து நடைபெற்ற இந்த சந்திப்பில், அணு ஆயுத ஒழிப்பு குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
 

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திக்கும் தேதியும் உறுதியானது. சிங்கப்பூரில் வரும் ஜூன் 12 அன்று இவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்தில் இந்த சந்திப்பை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு வடகொரியா - சீனா இடையே இருக்கும் உறவை அமெரிக்கா காரணமாக தெரிவித்தது.
 

இந்நிலையில், கிம் - ட்ரம்ப் இடையிலான சந்திப்பு நிச்சயம் நடைபெறும் என தென் கொரிய பிரதமர் லீ நக் யோன் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரிய தீபகற்பத்தில் நிறைய மாற்றங்கள் நிலவுகின்றன. இதே அமைதி தொடர்ந்து நிலவுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு உறுதுணையாக இருக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்ற உறுதி மற்றும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்; ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த நிறுவனம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Rs.62 lakh bonus for having a child in private company at south korea

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். 

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.

திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது. 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.