சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் சார்ந்த யுவராஜ் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி மாதம் 17ஆம் தேதி அதிகாலை சிறைக்குள் புகுந்து யுவராஜ் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறைக்காவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் 2 செல்போன்கள், சிம்கார்டு 2, பேட்டரி சார்ஜர் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த காவலர்கள் சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக ஜெய்லர் சதீஷ்குமார் அளித்த புகாரின் பெயரில் கேகே நகர் காவல் நிலையத்தில் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து யுவராஜ் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து தண்டனை கைதிகள் உள்ள தொகுதியில் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் சிறைக்குள் இருந்தபடியே யுவராஜ் பேசி அனுப்பியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோவில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரித்த திருச்செங்கோடு போலீஸ் சூப்பிரண்ட் விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆடியோ வெளியானது எப்படி என திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் உத்தரவின் பெயரில் சிறை சூப்பிரண்டு சங்கர் மற்றும் சிறை அதிகாரிகள் யுவராஜ் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஆய்வு செய்து அவரை விசாரித்தனர்.